அந்த போன் வந்ததிலிருந்து ராகினிக்குத் தலைக்கால் புரியவில்லை. இருக்காதா பின்னே திருமணமாகி தன் கணவனுடன் முதன்முறையாக வெளியே செல்லப் போகிறாள். மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. அவள் கணவன் ராஜா. தனியார் வங்கியில் மேனேஜராக உள்ளான். திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே வேலைப்பளு காரணமாக வேலைக்குச் சென்றுவிட்டான். அவன் தான் நான்கு நாட்கள் கொடைக்கானல் டூர் ராகினியை அழைத்துக் கொண்டு போகிறேன். கிளம்பத் தயாராக இரு என்று அவளுக்குப் போனில் கூறினான். அது தான் அலளுடைய மகிழ்ச்சிக்குக் காரணம்.
ராகினி திருச்சியில் பிறந்தவள். திருமணத்திற்குப் பிறகு சென்னையில் இருக்கிறாள். வீட்டில் மாமனார் மாமியார் துணைக்கு இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு இந்த மூன்று மாதத்தில் வெளியே எங்கும் சென்றதில்லை. இப்பொழுது தான் முதன்முறையாக தன் அன்புக் கணவனோடு ஹனிமூனுக்குக் கிளம்புகிறாள். அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்தவன் அம்மா கல்யாணியிடம் விஷயத்தைத் தெரிவிக்க அவளோ எனக்கு ஏற்கனவே உன் அக்கா வைதேகி கூறிவிட்டாள் என்றுக் கூறினார். ஆமாங்க இந்த ஹனிமூனிற்காக ஏற்பாடு செய்தது ராஜாவோட அக்கா வைதேகி.
வைதேகி திருமணமாகி மயிலாப்பூரில் இருக்கிறாள். திங்கள் கிழமை இரவு இவர்கள் கிளம்ப வேண்டும். அதனால் ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஊருக்குக் கிளம்ப தேவையானப் பொருட்களைப் பெட்டியில் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தாள் ராகினி. மறுநாள் இரவு தன் கணவனோடு தனியே பயணம் செய்யப் போவதையெண்ணி மகிழ்ந்தவாறே உறங்கினாள்.
அன்று திங்கட்கிழமை. இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் திநகர் பேருந்து நிலையம் வந்தனர். அங்கிருந்து மதுரைக்குச் செல்லும் பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர். ஜன்னலோர இருக்கையில் ராகினி அமர்ந்திருந்தாள். ராஜா அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தான். பேருந்து நகர ஆரம்பித்தது. இவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜா இவள் கைகளைப் பற்றியிருந்தான். அந்த இதமான ஸ்பரிசத்தில் அவள் மகிழ்ந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் உறங்கி விட்டான். இவளோ இயற்கையின் அழகையும் தன்னவனின் அழகையும் ரசித்துக் கொண்டே வந்தாள். தன்னவனின் அழகில் தன்னை மறந்தவள் மதுரை வந்தது கூடத் தெரியாமல் வைத்த கண் வாங்காமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நடத்துநர் மதுரை வந்துவிட்டது என்று கூற அதைக் கேட்டு ராஜா கண்விழித்தான். அரக்கப்பரக்க எழுந்தவன் மதுரைப் பேருந்து நிலையத்தில் ராகினியோடு இறங்கினான். மதுரையில் அவனுடைய அத்தை வீடு இருந்ததால் இருவரும் ஆட்டோ பிடித்து அங்குச் சென்றனர். வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அவன் அத்தை ஞானம் அவனை இன்முகத்துடன் வா ராஜா வாம்மா ராகினி என்று வரவேற்றாள்.
அங்கேயே குளித்து முடித்துவிட்டு காலை உணவு உண்டனர். பிறகு வாடகைக் காரில் இருவரும் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்குக் கிளம்பினார்கள். ராகினிக்கும் ராஜாவுக்கும் கொடைக்கானல் செல்வது முதல்முறை. ராஜா கூச்ச சுபாவமுள்ளவன். அதிகம் பேச மாட்டான். வழிநெடுக பச்சைப் பசேலென மரங்கள் பறவைகளின் சிரிப்பொலிகள் கருமேகங்கள் சூழ அங்கொன்றும் இங்கொன்றுமாய் மழைத்துளிகள் அங்கிருந்த மலைகள் அதன் அழகை ரசிக்க வா என்று அழைப்பதைப் போல உணர்ந்தாள் ராகினி. இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே வந்தாள்.
மூன்று மணி நேரப் பயணம். ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் மதிய உணவு உண்டுவிட்டு அவன் பயணக்களைப்பில் உறங்கி விட்டான். இவள் அறையின் வாயிலில் நின்று இயற்கையை ரசித்தாள். மாலை இருவரும் கிளம்பி முதலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குச் சென்றனர். பின்பு ஊசியிலைக் காடுகளுக்குச் சென்றனர். அங்கே இருவரும் கைகளைக் கோர்த்து நடந்தனர். அன்று மழை வந்ததால் இருவரும் தங்கும் விடுதிக்கு வந்தனர். இரவு நிலவொளியில் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான் ராஜா. இதைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன் நீங்களா இதை ஏற்பாடு செய்தீர்கள் என்றாள். ஆமாம் இது உனக்கு மிகவும் பிடிக்குமல்லவா அதனால் தான் என்றான். இருவரும் இரவு உணவை முடித்து விட்டு அறைக்குச் சென்றனர்.
படுக்கையில் படுத்த அவர்கள் இருவருக்கும் தூக்கம் வரவில்லை. குளிர் அவளை வாட்டி எடுத்தது. அதனால் குளிரைப் போக்க அவளை இறுகக் கட்டியணைத்தான். பின்பு இதழில் முத்தமிட்டு குளிரைக் குறைத்தான். இரவு முழுவதும் இருவரும் இணைந்திருந்தனர். மறுநாள் மகிழ்ச்சியில் அவள் முகம் சிவந்திருந்தது. மறுநாள் காலையில் இருவரும் ரெடியாகி கோக்கர்ஸ் வாக் படகு ஓட்டும் இடத்திற்குச் சென்றனர். படகோட்டும் இடத்தில் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாகப் படகை ஓட்டினர்.
மாலையில் கடைத்தெருவிற்குச் சென்றனர். அவன் அவளுக்குப் பிடித்த நீல நிறப் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தான். அறைக்கு வரும் முன் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்தான். தன் கணவனின் அன்பில் மயங்கினாள் ராகினி. அன்று இரவும் இருவரும் சேர்ந்து காமவிளையாட்டுகளை விளையாடினர்.
மறுநாள் காலையில் குளித்து முடித்து வந்தவள் மணி எட்டாகியும் கணவன் எழுந்திருக்காததைக் கண்டு அவனருகில் சென்றாள். அவனைத் தொட்டுப் பார்ததவள் ஒரு கணம் அதிர்ந்தாள். உடல் நெருப்பாய் கொதித்தது. ஹோட்டல் அலுவலகத்திற்கு போன் செய்து மருத்துவ உதவிக் கேட்டாள். அரை மணி நேரத்தில் டாக்டர் வந்தார்.
ராஜாவைப் பரிசோதித்த டாக்டர் ஜூரம் அதிகமாக உள்ளது என்று கூறி ஊசி போட்டு விட்டு மருந்துகளை எழுதிக்கொடுத்தார். ராகினி அங்கிருந்த பணியாள் மூலம் மருந்து வாங்கிக் கொடுத்தாள். இரண்டு நாட்கள் அவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள்.அவள் செய்தப் பணிவிடையில் அவன் மெய்மறந்தான். மூன்றாம் நாள் ராஜா இயல்பு நிலைக்குத் திரும்பினான். பின் இருவரும் காரில் சென்னை வந்தடைந்தனர்.
வரும் வழியெல்லாம் அவன் அவள் மேல் சாய்ந்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அது தான் அவர்கள் முதலும் கடைசியுமாக வெளியூர் சென்றது. இப்போது ராகினிக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகிறது. இரண்டு குழந்தைகள். இன்றும் யாராவது கொடைக்கானல் என்று சொன்னால் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும். தொலைக்காட்சியில் கொடைக்கானல் மலர் பூங்காவைப் பற்றிச் செய்தி ஓடிக்கொண்டிருக்க இவளோ ஊரடங்கினால் வீட்டில் இருந்தாலும் பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்தாள்.