Site icon Chandamama

நினைவோர் பறவை

Swing @pexels.com
Reading Time: 3 minutes

நினைவோர் பறவை

அது ஏன் என்று புரியவில்லை அவனின் இனத்தை கண்டால் சிறுவயது முதலே ஒரு இனம் புரியாத பயம் , வருடங்கள் உருண்டோடி அவனை நான் சந்திக்கும் வரையிலும் பயம் என்றே நினைத்தேன். பயம் என்பது வெறுப்பாக மாறி என்னுள் இருந்ததை நான் அதுவரை உணரவில்லை .வெறுப்பு என்று நான் ஒரு வார்த்தையில் சொன்னால் அதன் ஆழம் புரியாமல் போக வாய்ப்புண்டு அதனால் விளக்குகிறேன்.

அவன் இனத்தார் ஒரு தெருவில் இருந்தால் அந்த வழியே செல்ல மாட்டேன், அதை மீறி அவர்கள் அருகில் வந்தால் எப்போது விலகிச் செல்வார் என காத்திருப்பேன். என் தோழியர் வீட்டில் அவ்வினத்தவர் இருப்பதாய் கேள்வியுற்றால் அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன். நான் பார்த்த அவன் இனத்தவர் சிலர் செய்த சில கொடூர செயல்களாலும், அவர்களின் பயமுறுத்தும் பார்வையும்,குரலும் இந்த வெறுப்பு உண்டாகியதற்கு முக்கிய காரணம்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் முதல் முறை சந்தித்தோம், ஆம் திருமணமான முதல் நாள் நான் அவனை கண்டேன். அவன் அங்கு இருப்பான் என திருமணத்திற்கு முன்பே அறிந்தேன் எனினும் இம்முறை அவனை தவிர்க்க முடியாது என்பதையும் புரிந்துகொண்டேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டி புதிய வாழ்வினை தொடங்கிட துணிந்தேன். எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும் அவன் ஒருவன் இருப்பதினால் யாவரையும் தவிர்த்தேன். அவன் கண்களும் என் கண்களும் சந்திக்க கூடாது என்பதே என் மனதில் குறியாக இருந்தது. நாட்கள் நகர்ந்தது என் ஐயத்தை வீட்டார் அனைவரும் புரிந்து கொண்டனர், எல்லோரும் அவனிடமிருந்து என்னை காக்கும் முயற்சியில் ஈடுபட்டனர், அதை எண்ணி சந்தோஷபட்டாலும் , பயம் அகல வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தேன்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தைரியம் கொண்டு அவனை தவிற்பதை நிறுத்தினேன். அப்போது ஒன்றினை புரிந்து கொண்டேன், அவன் இனத்தில் இருக்கும் மற்ற சிலரை போல அவன் கொடூரமானவன் அல்ல, அவன் ஒரு குழந்தையை போல என்று. ஆனால் அவன் மனதில், இவள் நம்மை விரும்பமாட்டாள் இவள் அருகே செல்ல கூடாது என ஆழமாக பதிந்து விட்டது. ஆனாலும் நான் சில நாட்கள் தாய் வீட்டிற்க்கு சென்று திரும்பினால் என்னையே சிறு பிள்ளை போல சுற்றுவான். இப்படியாக எங்களுக்குள் சிறு ஈர்ப்பு தொடங்கியது. நான் சமையலறையில் சமைப்பதை அவன் கூடத்தில் படுத்தபடி ரசிப்பான், நான் மொட்டை மாடியில் துணி காயபோட சென்றால் சத்தமில்லாமல் பின் தொடர்வான்.

இப்படியாக நாட்கள் நகர மற்றும் ஓர் ஆண்டு கழிந்த நிலையில், அவனின் தாயார் அதாவது என் மாமியார், என்னையும் என் கணவரையும் நம்பி அவனை எங்கள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களின் தாய் வீடு நோக்கி பிரயாணம் செய்தார். காலை மற்றும் இரவு நேரத்தில் என் கணவர் அவனுக்கு உணவு ஊட்டுவார், அவர் இல்லாத நேரத்தில் அவனுக்கு தண்ணீர் கொடுப்பது, அவனுக்கு இதர உணவளிப்பது என நாங்கள் இன்னும் நெருக்கமானோம். சில நாட்களில் மாமியார் வீடு திரும்ப, நானும் என் குழந்தையை கவனிப்பதில் நேரம் சென்றது.இப்படியிருக்க மீண்டும் என் மாமியார் தாயகம் செல்ல, இம்முறை அவன் கண்களில் தாயை பிரிந்த ஏக்கத்தை கண்டேன். நானும் என் கணவரும் அவனை நன்கு கவனித்து கொண்ட போதும் அவன் முகத்தில் இனம் புரியாத சோகம் தாண்டவமாடியது. காரணம் அறியாமல் குழம்பிய நிலையில் இருந்தோம்.

அந்த நேரம் என் தாய்க்கு காலில் பலத்த சுளுக்கு ஏற்பட்டு வீக்கமும் ஏற்பட நான் அங்கு சென்றேன். பத்து நாட்களுக்கு பின் வீடு திரும்பும் போது அவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக என் கணவர் என்னிடம் கூறினார். மனதில் ஒரு சின்ன சலனம் ஏற்பட, ஒன்றும் ஆகாது என என்னை தேற்றியபடி வீடு வந்த எனக்கு முதல் அதிர்ச்சி அவனால் முன் போல் நடக்க முடியவில்லை, வயறு பலூன் போல ஊதி இருந்தது, அவனால் உணவும் உண்ண முடியவில்லை. மறுநாள் விடியற்காலையில் எழுந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் என் கணவர். அவர்கள் வீடு திரும்பியதும் இரண்டாவது அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது, அவனுக்கு பிறவியிலேயே இருதயத்தில் பிரச்சினை. அப்போதும் நம்பிக்கை இழக்காமல் அவனுக்கு ஒன்றும் ஆகாது என வீட்டாரை தேற்றினேன். அன்றிரவு அவனின் வயிற்றை காண எனக்கே திக் என ஆகியது, கணவரிடம் கூறி பாபாவின் திருநீற்றை பூசிவிட கொடுத்தேன்.

மறுநாள் காலை நல்ல மழை, நான் தேநீர் எடுத்து சென்று மாமனாரிடம் கொடுக்கும் போது அவன் சிறு குழந்தை பயத்தில் மலங்க மலங்க முழிப்பதை போல முழித்தான். உனக்கு ஒன்னும் ஆகாது பாப்பா, பயப்படாதே என சொல்ல. நடக்க முடியாமல் எப்படியோ தன்னையே இழுத்துக்கொண்டு வந்து நான் சமைப்பதையும் , மழை நீர் பிடிப்பதையும் பார்த்தபடி படுத்து கிடந்தான். நானும் அவனை பார்த்தபடி வேலையை தொடர்ந்தேன், மாமியார் வீடு திரும்பி அவனின் நிலை கண்டு அழுதார். அவரை தேற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் என் கணவர்.

வீட்டு வேலைக்கு இடையே அவனை பற்றி கணவரிடம் விசாரிக்க அவரோ அவன் இரத்தம் முழுவதும் கிருமி பரவி விட்டதாகவும், கணையத்தில் பிரச்சினை இருப்பதாகவும், மேலும் வயிற்றில் கட்டி பெரிதாக இருப்பதாகவும் கூறினார். சற்றே தலை சுற்றுவது போல இருந்தது, அவனை மருத்துவமனைக்கு தினம் தினம் அழைத்து வந்து மருத்துவம் பார்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறத்தியுள்ளனர் என்றார். சரி என்று கூறி , என் குழந்தைக்கு உணவளித்து கைகழுவிய அதே நேரம் என் அலைபேசி சிணுங்கியது. தொடர்ந்தது அடுத்த அதிர்ச்சி, அவனுக்கு கொடுத்த மருத்துவம் ஒத்துகொள்ளாமல் , வலிப்பு வந்து அவன் இறந்ததாக கண்ணீருடன் கணவர் சொல்லிய செய்தி என் நெஞ்சில் இடியை இறக்கியது போல இருந்தது.

கடைசி நாள் என்று தான் கண் இமைக்காமல் என்னை கண்டானோ. அவனிடம் இன்னும் சற்று முன்னரே நட்பு கொண்டிருக்கலாம், இல்லை அவனை நட்பு பாராட்டாமலே இருந்திருக்கலாம். குறுகிய காலம் தான் ஆனால் ஆழமானதொரு நட்பு உண்டாகியது. நாய்கள் பற்றிய என் பார்வையை மாற்றிய அவனின் அன்பு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று. இறந்த அவனின் முகம் நான் இறக்கும் வரையில் என்னால் மறக்க முடியாத ஒன்றானது. வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் அன்பிற்கும் சொந்தமான காரணத்தினால் அன்று வீடே கண்ணீர் குளமானது. அவனுடன் நான் கொண்ட நினைவுகளில் இது ஒரு சிறு பகுதி மட்டுமே, காலங்கள் தாண்டி என்றென்றும் எங்கள் நினைவுகளில் வாழும் மோஜோவிர்க்கு இந்த நினைவோர் பறவை சமர்ப்பணம் .

Exit mobile version