Site icon Chandamama

கரை ரொம்ப நல்லது..!!

Reading Time: 2 minutes

ஒரு அழகிய ஊரில் ஆற்றோரம் ஒர் அன்னை தன் ஏழு வயது மகனோடு வாழ்ந்து வந்தார். அந்த சிறிய குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது. தன் குழந்தைக்குக் கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்பது அந்த தாயின் கனவாக இருந்தது.

அந்த அன்னை அக்கம் பக்கத்தில் உள்ள பணக்கார வீடுகளில் வேலை செய்வார். அந்த வீட்டினர் அதற்குப் பதிலாக அவருக்குத் தானியம் தருவார்கள். அந்த தானியங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அவர் வீட்டிற்க்குத் தேவையான அத்தியாவிசய பொருட்களை வாங்கி வருவார்.

ஒரு நாள் தானியங்களைச் சந்தைக்குக் கொண்டு போகும் பொருட்டு ஒரு துணி பையில் வைத்து வாசலில் இருந்த மேசையின் மீது வைத்தார். நான் சென்று குளித்து விட்டு வருகிறேன் வீட்டைப் பத்திரமாக பார்த்துக் கொள் என்று தன் மகனிடம் கூறிச் சென்றார். எதிர்பாரா விதமாக சட்டென்று மழை வரவே வெளியில் காய்ந்து கொண்டிருந்த துணி மணிகளை அள்ளி வீட்டிற்குள் வைத்தான் சிறுவன். 

கூறையில் உள்ள ஓட்டை வழியே மழை நீர் வீட்டுக்குள் சொட்டத் துவங்கியிருந்தது.

வீட்டில் உள்ள பாத்திரங்களை ஓட்டைக்கு நேரே வைத்தவன் இனி மழை நீர் நம்மை ஒன்றும் செய்யாது என நினைத்து ஓய்வாக சிறிது உறங்கிவிட்டான்.

குளிக்க சென்ற அவனது தாயார் வழியில் ஒரு பெண்ணிற்க்குப் பிரசவ வழி எடுக்கவே அந்த பெண்ணிற்கு உதவி செய்யும் பொருட்டு உடனிருக்க நேர்ந்தது. உறக்கம் கலைந்து மாலை வரை தன் தாயார் இன்னும் வீடு வரவில்லையே என்று திகைத்த சிறுவன் வெளியில் வந்து பார்க்க மேசை மீது வைக்கப் பட்டிருந்த தானியங்கள் முழுமையாக நனைந்து விட்டிருந்தன.

தன் அன்னை வந்து தானியங்கள் நனைந்து விட்டதைப் பார்த்தால் தன் மீது கோபித்துக் கொள்வார் என்றெண்ணியவன் ஈரமாகி இருந்த தானிய பையை எடுத்துப் பரண் மீது மறைத்து வைத்தான்.

அவன் அன்னை வந்து அவனிடம் விசாரிப்பதற்க்கு முன் குரங்கு ஒன்று தானிய பையைத் தூக்கிச் சென்று விட்டதாகவும் தன்னையும் அது தாக்க வந்ததாகவும் பொய்யுரைத்தான். அவனது அன்னை அவனைத் தேற்றி அவன் பசி போக்க மழையில் முழைத்த காளான்களைப் பறித்து வந்து வேக வைத்துத் தந்தார்.

தன்னுடைய ஒரு வார உழைப்பைக் குரங்கு தூக்கிச் சென்று விட்டதே இந்த வாரம் என் மகனுக்கு உணவளிக்க என்ன செய்வேன்? என்று வருந்திய வண்ணம் உறங்கியும் போனார்.

தன்னுடைய இழப்பை ஈடு செய்யும் பொருட்டு அடுத்த நாள் விரைவாக எழுந்து பணிக்குச் சென்றார். தொடர்ந்து இரண்டு நாட்கள் தன் அன்னை கூடுதல் பணி செய்ய தன்னுடைய கவனக் குறைவு காரணமாக அமைந்து விட்டதே என்றெண்ணி குற்ற உணர்ச்சிக்கு ஆளானவன் அன்று மாலை உண்மையைக் கூறி தன் தாயிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து பரணில் இருந்த பையைன் இறக்கினான்.

கீழே இறக்கி வெளிச்சத்தில் பார்த்த பொழுது தான் தானியங்கள் முழைவிட்டிருந்ததை அவன் அறிந்தான். அதைச் சாப்பிட்டுப் பார்த்தவன் ருசி நன்றாக இருக்கவே அன்னையிடம் கொடுக்கலாம் என்று ஒரு தட்டில் பரப்பி வைத்தான். அப்பொழுது அங்கு வந்த அவனுடைய தோழன் முளை விட்டிருந்த தானியங்களை அள்ளி சாப்பிட்டுப் பார்த்தான். அதன் ருசி அவனுக்கும் பிடிக்கவே “இத உங்க அம்மா எப்புடி சமைச்சாங்க?” என்று கேட்டான்.  

தன் தவறும் ருசியானதை எண்ணி மகிழ்ந்த சிறுவன் தானியத்தை எடுத்துக் கொண்டு காகிதங்களையும் அள்ளிக் கொண்டு பேருந்து நிலையத்தை அடைந்தான். காகிதங்களைச் சுருட்டி முளைவிட்டிருந்த தானியங்களைப் பொட்டலம் கட்டி விற்கத் துவங்கினான்.

அன்று அவன் சம்பாரித்த பணத்தை வீட்டிற்க்கு மகிழ்ச்சியுடன் சென்று தன் அன்னையிடம் ஒப்படைத்தவன் தன் செயலை விளக்கி மன்னிப்பும் கேட்டான். அவனை வாரி அணைத்த அன்னை  தான் ஒரு மாதம் சம்பாரிக்கும்  பணத்தை தன் மகன் ஒரே நாளில் சம்பாதித்ததை எண்ணி மகிழ்ந்தார்.

அன்றிலிருந்து அவன் அன்னை முளை கட்டிய தானியங்களையும் நறுக்கப்பட்ட காய்கறிகளையும் விற்க துவங்கினார். சிறிது காலத்தில் அந்த குடும்பத்தின் நிதி நிலை உயர்ந்தது.அவனும் பள்ளி செல்லத் துவங்கினான்.

கரை ரொம்ப நல்லது..!!மனமிருந்தால் எதிலும் ஒரு மார்க்கமுண்டு..!!

Exit mobile version