ஜில் ஜில் ரமாமணி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர்.தன்னிகரில்லாத நடிகை. ஐந்து முதல்வர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமை இவருக்கே உண்டு. தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்தவர். இவர் தன் சாதனையால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். ஆச்சிக்குப் பிறந்தநாள் இன்று.
சிறுவயதிலேயே நாடகங்களில் நடித்தவர். பள்ளத்தூரில் தன் தாயுடன் வாழ்ந்து வந்த மனோரமா ஆச்சி அவர்கள் நன்றாகப் பாடும் திறன் கொண்டவர். அவர் அந்ஊரில் இருந்த போது ஒரு நாடகக் குழுவினர் அங்கு வந்தனர். அதில் பெண் வேடத்தில் நடித்தவருக்குச் சரியாகப் பாட வராததால் அவ்வூரில் அழகாகப் பாடக் கூடிய ஆச்சியை அதில் நடிக்க வைத்தனர். அது தான் அவர் நடித்த முதல் நாடகம். இதுவரை 5000 நாடகங்கள் அவர் நடித்துள்ளார்.
பல நாடகங்களில் நடித்து வந்த அவர் 1958ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தார். கோபிசாந்தா என்ற இயற்பெயர் கொண்ட இவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்ததும் மனோரமா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மாலையிட்ட மங்கை படத்தில் மனோரமாவை முதன் முதலாக நடிக்க வைத்தார். பிறகு களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி, பாலும் பழமும், பார் மகளே பார், திருவிளையாடல்,அன்பே வா, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், பட்டிக்காடா பட்டணமா உள்ளிட்டப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்தார்.
நடிகர்கள் பலர் நடிக்கும் திரையுலகில் நடிகையாக நகைச்சுவை நடிகையாகப் பெண்கள் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியவர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய மொழிகளில் இவர் நடித்துள்ளார். 1000-மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். படத்தில் அவருக்கு இருக்கும் பாடல்களை அவரே பாடிவிடுவார்.
தமிழ்த் திரையுலகில் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ஆர் செல்வி. ஜெயலலிதா மற்றும் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் ஆகிய ஐந்து முதல்வர்களோடு நடித்த ஒரே நடிகை என்றப் பெருமையைக் கொண்டவர். அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது பெற்றவர். நடிகையாக மட்டுமல்லாமல் அம்மா பாட்டி உள்ளிட்ட குணசித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார். கண்ணம்மா கம்முனு கிட சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் இந்த வசனத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார்.
கலைமாமணி விருது வாழ்நாள் சாதனையாளர் விருது என் எஸ் கே விருது ஜெயலலிதா விருது எம்.ஜி.ஆர் விருது அண்ணா விருது கலாசாகர் விருது சினிமா எக்ஸ்பிரஸ் விருது டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி உள்ளிட்டப் பல விருதுகளை ஆச்சி வாங்கியுள்ளார். தன் நடிப்பால் மக்களைக் கவர்ந்த ஆச்சி 2015 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன் சிறந்த நடிப்பால் மக்கள் மனதைக் கொள்ளைக் கொள்வதில் வல்லவர். பிறந்தநாளன்று கேக் வெட்டும் போது ஆச்சி அவர்கள் குழந்தைப்போல் மாறி விடுவாராம். ஆச்சிக்கு இன்று 83-வது பிறந்தநாள்.