நிலவைத் தேடி என் வீட்டு ஜன்னலிலிருந்து காண முடியாமல் மாடிக்கு சென்றேன். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது நிலாவும் வந்தபாடில்லை. நீல நிறத்தில் வெவ்வேறு வகைகள் உண்டு என்பதை கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் அன்று தான் அதன் உண்மையான அர்த்தத்தை நேரில் கண்டேன். வானத்தை நோக்கினால் ஒரு மெல்லிய கோட்டின் ஒரு புறம் அழகிய மஞ்சளும் இளம் நீலமும் மற்றொரு புறம் கருமேகம் சூழ தொடங்கும் அடர்த்தியான நீல நிறம்.
‘ஆஹா! கடவுளை விட மிகப்பெரிய ஓவியரும் உண்டோ! இயற்கையை விட மிகப் பெரிய ஓவியமும் உண்டோ!’ என்று மனம் பாராட்டிக் கொண்டிருக்கும் பொழுது மேகங்கள் இடையே மறைந்து விளையாடும் நிலா என் கண்ணில் படவில்லை ஆனால் நிலாவை மறைத்தது மேகங்கள் அல்ல அங்கு உள்ள ஒர் உயர்ந்த மாடமாளிகை என்று கூறுவது போல அந்த கட்டிடத்தின் பின்னிலிருந்து மிகவும் பிரம்மாண்டமாக ‘இங்க இருக்கேன்… வா! என்னை ரசி’ என்பது போல சூரியனின் செந்நிற கதிர்கள் அன்று நிலா வாடகைக்கு வாங்கியது போல ஒலித்தது.
பௌர்ணமி இரவில் வவ்வால் பறப்பதைக் கண்டேன் கண்டதும் என்னுள் ஒர் அச்சம் ‘தீய சக்தியின் அறிகுறியோ?’ என்று கேள்விகள் தொடங்கின. சிறு வயதில் கண்ட அத்தனை அம்மன் படத்திலும் வரும் தீய சக்திகள் நினைவுக்கு வந்தது. என்னவென்றே தெரியாத பில்லி, சூனியம், மந்திர, தந்திரம் அனைத்தும் உண்மை என்று நம்பி பட படத்துப் போனேன். இருள் சூழ்ந்தது எந்தவித வெளிச்சமும் இல்லை கையில் கைப்பேசியும் இல்லை தூரத்தில் ஓர் வெள்ளை நிறம். நான் கேட்டிராத வினோதமான சத்தம் அதை ரசிப்பதா அல்லது பயப்படுவதா என்றறியாமல் திகைத்தேன். பின்னாலிருந்து யாரோ என்னை பார்ப்பது போன்ற எண்ணம். சற்று நேரத்தில் என் தோள் பட்டையில் ஐந்து விரல்கள். தூக்கிவாரிப் போட்டு மயங்கி விழுந்தேன்…
முகத்தில் நீர் பட்டு எழுந்தபின் மங்கலான முகம்… எங்கேயோ பார்த்த ஞாபகம்!!! அவர் ஏதோ கூறுகிறார் ஆனால் என் செவிக்கோ மூளைக்கோ எட்டவில்லை. மீண்டும் கண்களை இறுக்க மூடி பின்பு திறந்தேன். கண் முன்னே என் கணவர் கையில் கைபேசியின் வெளிச்சம் தூரத்தில் இருந்தது பக்கத்து மாடியில் காய்ந்த துண்டு. மேலும் எதுவும் பேசாமல் கைத்தாங்கலாக வீட்டிற்கு திரும்பினோம் இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தோம். அவர் வேலை களைப்பால் தூங்கிவிட்டார் எனக்கு உறக்கம் வரவில்லை.
பொழுதுபோக்கிற்காக கைபேசியை நோண்டினேன். எப்படியோ உறங்கி காலையில் கண் விழித்தேன். பக்கத்து வீட்டில் ஜோதிடரின் தொலைக்காட்சி சத்தத்தைக் கேட்டு அதைப் பார்க்கவேண்டும் என்று ஓர் ஆவல் ஆகையால் நானும் தொலைக்காட்சியை போட்டேன். அந்த நிகழ்ச்சி எனக்காகவே சித்தரித்தது போல் தோன்றியது.
‘தினமும் ஒரு தகவல்’ என்னும் பகுதியில் “வவ்வால்கள் அம்பாளின் சொரூபமாக கருதப்படுகிறது மற்றும் அதன் நல்ல சகுனத்தில் அறிகுறி” என்று செய்தியாக கூறினார். அதைப் பார்த்தவுடன் என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை ஆனால் வயிறு பெரட்ட தொடங்கியது குபீரென்று வாந்தி எடுத்தேன். கணவருக்கு மிகுந்த மன உளைச்சலை தந்தது என் நிலை அவர் மருத்துவரை நாட வற்புறுத்தினார். கணவன்-மனைவியாக மருத்துவமனைக்கு சென்ற நாங்கள் அப்பா-அம்மாவாக வீடு திரும்பினோம்.