Site icon Chandamama

சூப்பர் ஸ்டார் எம்.கே .டி

Reading Time: 2 minutes

                                        

பெரிய பாகவதர் இவரு பாடித்தள்ளிருவாரு என பலர் ஏளனம் பேச கேட்டு இருப்போம் . அந்த ஏளன பேச்சின் அடிநாதமாய் உள்ள மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்த எம். கே. தியாகராஜ பாகவதர் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க நியாயமில்லை .

இன்று மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயூரத்தில் 1910 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் இருந்தே கல்வி கற்பதில் அவருக்கு பெரிய ஆர்வம் எதுவும் இல்லை. அவருக்கு பிடித்தது எல்லாம் பாடல் பாடல் பாடல் மட்டுமே!

அதுவும் பிறர் பாடுவதை ஒருமுறை கேட்டாலும் , அதை அப்பிடியே வரி மாறாமலும் , ஸ்வரம் மாறாமலும் அப்படியே திரும்ப பாடும் திறன் பெற்று இருந்தார். அத்திறமையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே இருந்தார்.

இவரின் இத்தகைய திறமையைக் கண்ட அவரின் பெற்றோர் அவருக்கு கர்நாடக சங்கீதம் பயிற்றுவித்தனர். அதன் மூலம் மேலும் நன்றாகவே பாட ஆரம்பித்தார். அந்த நாட்களில் , பலவசதிகளைக் கொண்ட ரெகார்டிங் தீயேட்டர் என்று எதுவும் கிடையாது. மீண்டும் மீண்டும் பதிவு செய்துக்கொள்ளும் வசதியும் கிடையாது. 

நடிப்பவர் உச்ச ஸ்வரத்தில் பாட வேண்டியது தான் ! எனவே நன்றாகப் பாடத்தெரிந்தவரே அந்நாட்களில் சினிமாவில் நடித்துவந்தனர்.  பாகவதருக்கோ நல்ல பாடும் திறமை இருந்ததால் தெரு கூத்து மற்றும் மேடை நாடகங்களில் பெண்வேடமிட்டு அதாவது “ அயன்ஸ்திரி” பார்ட்டில் நடித்து வந்தார். பிறகு குடும்பத்துடன் திருச்சிக்கு குடியேறினார்.

அப்போது தான் அவருக்கு அரிச்சந்திரன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பிறகு நாடக ஆசான்களிடம் முறையாக நடிக்கவும் பயிற்சிப்பெற்றார். அவருக்கு அமைத்த குரல்வளம் , நடிப்புத் திறமை மிக பிரமாதமாக இருந்தது அன்றைய தினத்தில் யாருக்குமே வாய்க்காத ஒரு திறமையாகவே கருதப்பட்டது.

இப்படி பாடியும் ,நடித்தும் அசத்தியதாலே இவருக்கு “பாகவதர்”  என்ற பட்டத்தை வித்துவான்புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி வழங்கினார். இன்றளவில் பாகவதர் என்றாலே தியாகராஜ பாகவதர் என்றாகிவிட்டது.

1934 ஆம் ஆண்டு  “பவளக்கொடி“ என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அன்று முதல் அவரது வெண்கல குறளிற்கு பலர் அடிமையாகினர். 

அவரின் சிகை அலங்காரம் , பட்டு உடை , சந்தன பொட்டு ஆகியவை பலராலும் பின்பற்றப்பட்டு மிகப் பெரிய சென்சேஷன் ஆகி மிக பெரிய நடிகராகிவிட்டார் மிகக் குறுகிய காலத்திலேயே. 

அவர் நடித்தது வெறும் பதினைந்து அல்லது  பதினாறு படங்களே ஆனால் அவர்தான் தமிழ் சினிமாவின் முதன்முதல் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.

அதிலும் அவர் நடித்த “ஹரிதாஸ்” என்கிற திரைப்படம் 1944 ஆம் ஆண்டு வெளியாகி  மூன்று தீபாவளிகளை கடந்து ஓடி இன்றளவும் அசைக்கவே முடியாத சாதனையைப்புரிந்தது.

அவரது பாடல்களும் மிகமிக பிரபலம்

              “தீன கருணாகரனே நடராஜா”

“பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்

“மன்மத லீலையை வென்றார் உண்டோ”

போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.

லட்சுமி  காந்தன்  கொலைவழக்கில்  அவர் கைது  செய்யப்பட்டு  குற்றமற்றவர்  என்று  விடுதலை  செய்யப்பட்டாலும்  மக்கள்  மத்தியில்  அவர் இழந்த  நன்மதிப்பை  மீண்டும்  பெற  முடியாமல்…  சினிமா வாய்ப்பும் இல்லாமல்  1959 ஆம் ஆண்டு  மறைந்தார்.

சா.ரா.

Exit mobile version